தென் சென்னையை விட வட சென்னைக்கு பூகம்ப ஆபத்து அதிகம்

Wednesday, 15 July 2009 08:33 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

மாலை மலர் 15.07.2009

தென் சென்னையை விட வட சென்னைக்கு பூகம்ப ஆபத்து அதிகம்

பூகம்பத்தால் அடிக்கடி பேராபத்துகளை சந்திக்கும் நாடுகளாக ஜப்பான், இந்தோனேஷியா போன்றவை உள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி இந்தோனேஷியாவின் சமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம் பத்தால் "சுனாமி" உருவானது. இந்த சுனாமி அரக்கன் தாக்கியதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் பலியானார்கள்.

இந்த சுனாமிக்கு பிறகு இந்தோனேஷியாவில் தொடர்ச்சியாக பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த பூகம்பங்கள் 5 முதல் ரிக்டர் அளவுக்கு பதிவாகி வருகிறது. இது தவிர இந்தோனேஷியா கடல் பகுதிகளிலும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டு "சுனாமி" அரக்கன் வந்து விடுவானோ என்ற பீதியை தமிழக கடலோர மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

இது தவிர சமீபகாலமாக வங்க கடலில் திடீர் திடீரென கொந்தளிப்புகள், கடல் உள் வாங்குதல்... என்று மிரட்டிய வண்ணம் உள்ளன. இதனால் தமிழகத்தில் எந்நேரத்திலும் இயற்கை பேரழிவு ஏற்படுமோ என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி வல்லுனர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் சென்னையில் உள்ள புவியியல் அமைப்பை ஆராய்ந்த போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஒருவேளை சென்னையில் பூகம்பம் ஏற்பட்டால் தென் சென்னையை விட வட சென்னைக்குத்தான் அதிக ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் வட சென்னையின் அடிப்பகுதியில் பாறை மற்றும் மணல் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பூகம்பம் ஏற்படும் போது கட்டிடங்கள் எளிதில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

தென் சென்னையை பொறுத்தவரை பூமியின் அடிப்பகுதி ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. பூகம் பத்தின் போது பெரிய அளவுக்கு கட்டிடங்கள் சேதம் அடையாது.

இதுபற்றி இந்திய புவியியல் ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் முரளிதரன் கூறியதாவது:-

சென்னையின் புவியியல் அமைப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அப்போது சென்னையில் 3 முதல் 5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுபவர்கள் பூகம்பத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கட்டிடங்களை கவனமாக கட்ட வேண்டும். இதற்கு கூடுதலாக 20 சதவீதம் செலவாகும்.

கட்டிடங்கள் பூமிக்கடியில் இருந்து கட்டப்பட வேண்டும். கட்டிடத்தின் கீழ் பகுதி பலமானதாக இருக்க வேண்டும். கார் நிறுத்து வதற்காக அடித்தளத்தை வெறும் தூண்களால் அமைப்பது நல்லதல்ல பூகம்பம் ஏற்படும் போது கட்டிடம் இடிந்து விடும் எனவே நாம் பூகம்பத்திற்கேற்ப கட்டிடங்களை கட்டிக்கொண்டால் பேரா பத்துகளில் இருந்து தப்பி விடலாம் என்றார்.

தேசிய பேரழிவு மேலான்மை அலுவலக அதிகாரி ஒருவர் கூறும் போது:-

சென்னை நகரம் மிதமான பூகம்பம் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கடந்த 1972-ம் ஆண்டு ஜூலை மாதம் 10ந்தேதி அன்று பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.9 என்று பதிவாகி உள்ளது.

இதற்கு முன்பு 1807 மற்றும் 1816 ஆண்டுகளில் சென்னையில் 5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தோனேஷியாவில் தொடர்ந்து பூகம்பம் மிரட்டி வருகிறது. அந்த பூகம்பம் என்றாவது ஒரு நாள் பெரிய அளவில் ஏற்பட்டால் சுனாமி உருவில் நம் நாட்டுக்கு பலத்த சேதம் ஏற்படும். ஒரு வேளை சென்னையில் நிகழ்ந்தால்... உயிரிழப்பு கடுமையாக இருக்கும்.

எனவே சென்னையில் கட்டிடம் கட்டுவோர் பூகம்ப தடுப்பு முறையைப்பயன்படுத்தி கட்ட வேண்டும் என்று புவியியல் ஆராய்ச் சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சில ஜோதிடர்கள் 22-ந்தேதி சூரிய கிரகணத்தின் போது சுனாமி ஏற்படும் என்று கணித்துள்ளனர்.

இதனால் சென்னை மக்களிடம் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 15 July 2009 11:51