தினமலர் 21.07.2010
பெங்களூர் மாநகராட்சியில் விண்ணப்பித்த 10 நாளுக்குள் பிறப்பு சான்றிதழ்
பெங்களூர், ஜூலை 21: பெங்களூர் மாநகர மக்களுக்கு விண்ணபித்த 10 நாட்களுக்குள் பிறப்பு&இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை மேயர் என்.தயானந்த் உத்தரவிட்டார்.
பெங்களூர் மகாத்மாகாந்தி சாலையில் உள்ள மாநகராட்சி பொதுமக்கள் சேவை மையத்திற்கு நேற்று காலை திடீரென வந்த துணைமேயர், அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப்போது இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து 3 மாதங்களாகியும் கிடைக்காமல் தவித்து வந்த பெண் ஒருவர் துணைமேயரிடம் தனது அவதியை தெரிவித்தார்.
இதில் கோபமடைந்த அவர், அதிகாரிகளிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டுமே அலுவலகம் திறந்து, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சேவை கேட்டு வரும் மக்களுக்கு இன் முகத்துடன் செய்ய வேண்டியது கடமையாகும்.
மாநகர மக்கள் பிறப்பு&இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 10 நாட்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பல அதிகாரிகள் பின்பற்றாமல், மக்களை அலைய விடுவது சரியல்ல.
சாதாரண விஷயத்திற்காக மக்கள் அலைவது தவிர்க்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் யார் மெத்தனமாக செயல்பட்டாலும், அத்தகைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மாநகராட்சி அலுவலகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப உடனடியாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.