தினமலர் 28.05.2010
பாதாள சாக்கடை தூர் வார இயந்திரங்கள் ரூ.12 லட்சத்தில் வாங்க மாநகராட்சி முடிவு
திருப்பூர் : பாதாள சாக்கடை திட்ட குழிகளில் கழிவுகளை தூர்வார, இரண்டு இயந்திரங்கள் வாங்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. திட மற்றும் திரவக்கழிவுகளை அகற்றுவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. மாநகராட்சியில் திடக்கழிவுகளை அள்ளுவதற்கு 13 “டுவின் கன்டெய்னர் டம்பர் பிளேசர்‘ வாகனங்கள் உள்ளன.
குப்பை தொட்டிகள், “டம்பர் பிளேசர்‘ மூலம் பாறைக் குழிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. தற்போது, வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் போதுமானதாக இல்லை.அதனால், கூடுதலாக 80 குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன. அவையும் செயல்பாட்டுக்கு காண்டு வரப்பட்டால், “டம்பர் பிளேசர்‘களின் எண்ணிக்கை போதாது.
எனவே, கூடுதலாக இரண்டு “டம்பர் பிளேசர்‘ வாங்க, மாநகராட்சி நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. இதற்காக, 30.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு டிரைவர் பணியிடங்களை ற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எட்டாவது வார்டு நாவலர் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கும் கழிவு நீரை அகற்ற, பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மின்மோட்டார் அமைத்துள்ளனர். அதற்கான மின்கட்டணத்தை யும் செலுத்தி வருகின்றனர். அந்த மின் மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க முன்வந்துள்ளது. மின்கட்டணத்தை செலுத்தவும் முடிவு செய்துள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தில் “மேன் ஹோல்‘ குழிகளில் கழிவுகளைத் தூர்வாரும் இயந்திரங்கள் இரண்டு வாங்கப்பட உள்ளன. இதற்காக 11 லட்சத்து 99 ஆயிரத்து 442 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பான தீர்மானங்கள், வரும் 31ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்படுகிறது.