தினமணி 11.08.2010
கோவை மேற்கு மண்டலத்தில் ஆக. 13-ல் குறைதீர் முகாம்
கோவை, ஆக. 10: கோவை மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் ஆக. 13-ம் தேதி நடைபெறும் என்று, மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களிலும் 6 வார்டுகள் வீதம் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 35, 48, 49, 50, 51, 57-வது வார்டு மக்களுக்கான குறைதீர் முகாம், மேற்கு மண்டல அலுவலகத்தில் ஆக. 13-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம் முகாமை, மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைக்கிறார். ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகிக்கிறார்.
சொத்துவரி விதித்தல், புதிய தொழில்வரி விதித்தல், சொத்துவரி பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பு அல்லாத முறையில் இருந்து குடியிருப்பு முறைக்கு குடிநீர்க் கட்டணம் மாற்றுதல், பிறப்பு- இறப்புச் சான்றிதழ், கட்டட அனுமதி வரைபட நகல் வழங்குதல், சொத்துவரி தொடர்பான மேல்முறையீடு தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்துதல், நிலஅளவை பதிவேடு நகல் வழங்குதல், எரியாத தெருவிளக்குகளை சரிசெய்தல், திடக்கழிவு அகற்றுதல், கழிவுநீர் கால்வாய்களை சீர்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது இம் முகாமில் உரிய நடவடிக்கை எக்கப்படும். மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்