தினமணி 15.10.2013
கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீரைத் தேக்கியவர்களுக்கு ரூ. 14 லட்சம் அபராதம்
சென்னையில் கொசுக்கள் உற்பத்தியாகும்
வகையில் நீரைத் தேக்கிகட்டுமானப் பணிகளை மேற்கொண்டவர்களிடம்
இருந்து இதுவரை ரூ.14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
சென்னையில் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்
விதமாக, கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு
பகுதியாக கொசுக்கள் உருவாகும் வகையில் கட்டுமானப் பணிகளை
மேற்கொள்பவர்களிடம் இருந்து இதுவரை சுமார் ரூ. 14 லட்சம் வரை
அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் வாரியம், குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி
வாரியம் ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்டு பராமரிப்பின்றி உள்ள
பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன என்றனர்.
அடையாறு மண்டலத்தில் தொடர் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து
மாநகராட்சி வெளியிட்ட செய்தி: அடையாறு மண்டலத்தில் உள்ள 170,
171, 172, 174, 180 வார்டுகளில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளின் கிணறு,
தொட்டிகளில் கொசுப்புழு வளராதவாறு மருந்துகள் தெளிக்கப்பட்டன.
டெங்கு பாதித்த பகுதிகளில் தீவிர நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. இந்த வார்டுகளில் மட்டும் 468 டயர்கள்
அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் 394 இடங்களில் கொசுப்புழு
இருப்பது கண்டறியப்பட்டு, அவை அழிக்கப்பட்டன.
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. வீடு வீடாகச் சென்று காய்ச்சல்
உள்ளவர்களைக் கண்டறிந்து, 56 பேரின் ரத்த மாதிரி பெறப்பட்டு
பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்தப் பணியில் 164 பணியாளர்கள்
ஈடுபடுத்தப்பட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.