தினகரன் 30.06.2010
மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் 15 நாளில் இயங்கும் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
மதுரை, ஜூன் 30: மாட்டுத் தாவணியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட் ஜூலை 15&ந் தேதிக்குள் செயல்பட துவங்கும் என மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் செபாஸ்டின் அறிவித்தார்.
மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி பதிலில் வெளியான தகவல்கள்:
காங். குழு தலைவர் சுப்புராம்:
மதுரையில் ரோடுகளை புதுப்பிக்க வேண்டும். மாநகராட்சி நிதி பற்றாக்குறையை சீர் செய்ய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மூலம் அனைத்து கட்சி குழு முதலமைச்சரை சந்திக்க வேண்டும். மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் எப்போது செயல்பட துவங்கும்?
ஆணையாளர் செபாஸ்டின்:
சென்ட்ரல் மார்க்கெட் ஏலம் படிப்படியாக நடைபெற்று ஜூலை 1&ந் தேதி முடிகிறது. ஜூலை 15ந் தேதிக்குள் மார்க்கெட் செயல்பட துவங்கும். மீனாட்சி அம்மன் கோயில் அருகில் தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட் காலி செய்யப்பட்டு நவீன வடிவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.
கணேசன் (மார்க்சிஸ்ட்):
ஓட்டல்களில் உணவு கலப்படத்தை தடுக்க தொடர் நடவடிக்கை தேவை. நகர் முழுவதும் ரோடுகள் பல்லாங்குழிகளாக காட்சி அளிக்கின்றன. மாநகராட்சியில் நிதி இல்லை. அரசிடம் கேட்க வேண்டும்.
ஆணையாளர்:
மாநகராட்சி நிதி மூலம் பல்வேறு திட்டங்கள், அத்தியாவசிய பணிகள் நடைபெற்றுள்ளன. மதுரை நகர் முழுவதும் சாலைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த தமிழக அரசு நிதி அளிக்கிறது. இதற்கான ஆய்வுகள் முடிந்துள்ளன. ரூ.350 கோடியில் சர்வதேச தர சாலை அமைக்கும் பணிகள் நவம்பரில் தொடங்கும்.
முருகேசன் (தி.மு.க.):
ராஜாஜி பூங்கா இருளடைந்துள்ளது. அங்கு மின் விளக்குகள் அமைத்து சீரமைக்க வேண்டும்.
சிலுவை (காங்கிரஸ்):
வைகை ஆற்று கரையின் இருபுறமும் பெத்தானியபுரத்தில் இருந்து மேலக்கால் வரை புதிய சாலை அமைக்க வேண்டும்.
நாகலட்சுமி (தி.மு.க.):
நகரமைப்பு குழு அதிகாரத்தை மீறி அதிகாரி நடவடிக்கை உள்ளது. இதில் யாருக்கு அதிகாரம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
ஆணையாளர்: இதற்காக தனிக்குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்.