தினகரன் 29.07.2010
நாமக்கல் நகராட்சியில் பிறமொழி பெயர் பலகையை அகற்ற 15ம் தேதி வரை கெடு
நாமக்கல், ஜூலை 29: நாமக்கல் நகராட்சியில் பிறமொழி பெயர் பலகைகளை அகற்ற வருகிற 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடை களில் வைக்கப்பட்டிருக்கும் பிறமொழி பெயர் பலகைகளை வருகிற 15ம் தேதிக்குள் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் பெயர் பலகை வைக்கும்போது அதில் தமிழும் இடம் பெற வேண்டும். தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். பெயர் பலகையில் தமிழ்மொழி இல்லாமல் இருந்தால் அந்த பலகைகள் அகற்றப்பட்டு அதற்கான செலவுத்தொகை வணிக நிறுவனங்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன் ஆகியோர் கூறியுள்ளனர்