தினமணி 22.09.2010
மாட்டுத்தாவணியில் ஆக்கிரமிப்பு: ரூ. 1.5 லட்சம் பொருள்கள் பறிமுதல்மதுரை,செப். 21: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, வாரம் இருமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகையில் மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய மண்ணெண்ணெய் அடுப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் உபயோகிக்கப்படுகின்றனவா என சோதனை செய்தனர்.
அப்போது நடைபாதையை ஆக்கிரமித்து விற்பனைக்காக வைத்திருந்த பொருள்களை ஊழியர்கள் அகற்றினர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த 3 சைக்கிள்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும், ஆணையர் முன்னிலையில் பறிமுதல் செய்தனர். அவை மாநகராட்சி பண்டகச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மொத்தம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக, ஆணையர் செபாஸ்டின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆய்வின்போது உதவி ஆணையர் (வருவாய்) எம்.ஆசைத்தம்பி, சந்தை கண்காணிப்பாளர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கட்டட ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.