கோவையில், அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் கலெக்டர் கருணாகரன் உத்தரவு
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் அளித்து கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சீல் நடவடிக்கை
கோவை மாவட்டம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற கட்டிடங்கள், விதி மீறல் கட்டிடங்கள் மீது உள்ளூர் திட்டக்குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை கட்டுமானத்துறை கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையில் உறுப்பினர்கள் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
கோவை மாவட்டத்தில் கட்டிட வரைமுறைகள் கடந்த காலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆகவே வளர்ந்து வரும் கால நிலைக்கு ஏற்ப அண்டை மாநிலங்களில் உள்ளது போன்று எப்.எஸ்.ஐ போன்ற சட்ட விதி தளர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் கோவை பிரதான சாலைகளில் பல வணிக வளாக கட்டிட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
ஆனால் அதற்கு போதிய கால அவகாசம் அளிக்காமல், சீல் வைத்தல் நடவடிக்கை என்பது பல்வேறு இன்னல்களுக்கும், இழப்புக்கும் ஆளாக நேரிடுகிறது. ஆகவே கட்டிடங்களுக்கு பாதுகாப்பு குறைகளை சரி செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாமல் சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.
கலெக்டர் உத்தரவு
இதை பரிசீலனை செய்த கலெக்டர் கருணாகரன், கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் கட் டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைப்பதை தடுக்க, 15 நாட்கள் கால அவகாசத்துக்குள், அனைத்து கட் டிட உரிமையாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்படி சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் அந்த கட்டிடங்களில் தீத்தடுப்பு, அவசரகால வழி அமைத்து சரி செய்ய வேண்டும்.
2007–ம் ஆண்டுக்கு முன்பு உள்ள கட்டிடங்களுக்கு அரசு விதி தளர்வு செய்து அனுமதிக்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி வரைமுறை செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.