தினமணி 01.09.2009
கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் 15 படகுகள் மூலம் கொசு ஒழிப்பு
சென்னை, ஆக. 31: கூவம் ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் 15 படகுகள், கட்டுமரங்களில் சென்று கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூவம் ஆற்றில் கட்டுமரங்களைக் கொண்டு, கொசு மருந்து தெளிக்கும் பணியை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள 2,500 தொழிலாளர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதையும் அவர் ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட 123 கி.மீ. நீளமுள்ள நீர்வழிப் பாதைகளிலும், 1,000 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்களிலும் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 9 கட்டுமரங்களும், 6 ஃபைபர் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புழுக்கொல்லி மருந்துகளும் தெளிக்கப்படுகின்றன. இதற்காக 406 தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநகரில் 50-க்கும் மேற்பட்ட புகை பரப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இப் பணிகளில் 50 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி மருந்தகங்களிலும், தாய் சேய் நல மையங்கள் உள்ளிட்ட 74 இடங்களில் கர்ப்பிணிகளுக்கு மலேரியா நோய் கண்டறிய ரத்தம் எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
இது தவிர கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் மா. சுப்பிரமணியன்.