தினபூமி 12.07.2013
முதன்மை மாநிலமாக மாற்ற ரூ.15 லட்சம் கோடியில் திட்டம்
மதுரை, ஜூலை 12 – இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிகமாக
மாற்றுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.15 லட்சம் கோடியில் திட்டம்
வகுத்துள்ளார் என்று மதுரை மாநகராட்சிப் பள்ளிகளை சார்ந்த 2536 மாணவ
மாணவிகளுக்கு மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் கூட்டுறவுத்துறை
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசும் போது
தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
வழங்கும் விழா நேற்று ராஜா முத்தையா மன்றத்தில் மேயர்
வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்
பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர்
செல்லூர் கே.ராஜூ 2536 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி
பேசும் போது தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் கனவுத்திட்டம் மாணவ
மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமாகும். அமெரிக்க
முன்னால் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஒரு ஏழை செருப்புத் தைக்கும்
தொழிலாளியின் மகன் ஆவார். தன் குடும்ப வறுமையால் படிப்பதற்குக்கூட முடியாத
நிலைமையில் தன்னுடைய விடா முயற்சியால் பிற்காலத்தில் அமெரிக்க நாட்டிற்கே
ஜனாதிபதியாக உயர்ந்து கருப்பு இன மக்களுக்கு விடுதலைப் பெற்று தந்தார்.
இதனை போன்று விடா முயற்சியோடு அம்மா அவர்களின் திட்டங்களை பயன்படுத்தி
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களும் சிறந்து விளங்கி இந்திய நாட்டின்
ஜனாதிபதி ஆகக்கூட வரமுடியும்.
தமிழ்நாட்டின் வருட வரவு செலவு ரூ.1.42 லட்சம் கோடியாகும். இவற்றில்
கல்வித்துறைக்கு மட்டும் ரூ.16,965 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்ற ஆண்டு ரூ.14,553 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு
கூடுதலாக ரூ.2000 கோடியை அம்மா அவர்கள் கல்வித்துறைக்காக வழங்கி
உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை சீரமைப்பதற்காக ரூ.1,660
கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு
வரை அனைத்தும் இலவசம். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
என மாணவர்களுக்காக வாரி வழங்கி உள்ளார்கள். 2023 ஆண்டில் இந்தியாவில்
தமிழ்நாடு முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ரூ.15 லட்சம் கோடியில்
திட்டம் வகுத்துள்ளார்கள். மாணவர்களாகிய நீங்கள் படித்து முடிக்கும் போது
அனைத்து வெளிநாட்டு கம்பெனிகளும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். இதன்மூலம்
வேலைவாய்ப்பு அதிக அளவில் இருக்கும். உங்கள் நோக்கம் முன்னேற்றம்
என்பதிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் வரும் வாய்ப்புக்களை நன்றாக
பயன்படுத்த முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் திட்டங்களை
பயன்படுத்தி சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
விழாவில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பாபேசும் போது தெரிவித்ததாவது,
மதுரை மாநகராட்சி கல்வித்துறை மாநகராட்சியின் மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு, மாசில்லா மாநகர் குறித்த விழிப்புணர்வு என அனைத்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மதுரையை தூய்மையாக
இருப்பதற்காக மாணவ மாணவிகள் உறுதியாக இருந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர்
அம்மா அவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் உலக
செய்திகளை உங்கள் மடிக்கே கொண்டு வர செய்துள்ளார்கள். மஞ்சு விரட்டில்
மாட்டின் மூக்கனாங்கயிறை பிடித்தால் மாடு வசப்படுவது போன்று மாணவர்களாகிய
உங்களின் எண்ணம் லட்சியப்பாதையாக இருக்க வேண்டும். மூக்கனாங்கயிறை விட்டு
விட்டு வாலைப்பிடிக்கும் எண்ணமாக இருக்கக் கூடாது.
உலக வரலாற்றில் பல்வேறு அறிஞர்கள் 16 வயதில்தான் சாதனைகளை
படித்துள்ளார்கள். எனவே இக்கால கட்டத்தில் உங்கள் திறமைகளை வெளியில் கொண்டு
வரவேண்டும். மதுரை மாநகராட்சிப் பள்ளி மற்ற மாநகராட்சிகளை விட பொது
தேர்வில் முதலிடம் பெற்று 94 சதவீதம் பெற்றது போன்று வரும் காலங்களில் 100
சதவீதம் வெற்றி பெற வேண்டும். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும்
மாணவர்களை மாநகராட்சி தத்தெடுக்க உள்ளது. கல்வித்துறைக்காக மதுரை
மாநகராட்சி பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்
இத்திட்டங்களை பயன்படுத்தி சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
எஸ்.டி.கே.ஜக்கையன், மாநகராட்சி ஆணையாளர் இரா.நந்தகோபால் , சட்டமன்ற
உறுப்பினர்கள் கே.தமிழரசன், சுந்தரராஜன், .அண்ணாத்துரை, மண்டலத் தலைவர்கள்
பெ.சாலைமுத்து, கே.ராஜப்பாண்டியன், கே.ஜெயவேல், நிலைக்குழுத் தலைவர்கள்
சுகந்திஅசோக், சரவணன்,எஸ்.டி.ஜெயபாலன், முனியாண்டி, முத்துக்கருப்பன்,
மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ், உதவி ஆணையாளர்
தேவதாஸ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர்
கலந்து கொண்டனர்.