தினமலர் 03.10.2013
கழிவுநீரில் மிதந்த வீடுகளுக்கு ரூ.1.5 கோடியில் வடிகால் பணி
திருச்சி: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, காட்டூர் அண்ணா நகர் வீடுகளைச் சுற்றி தேங்கி நின்ற கழிவுநீரை வெளியேற்ற திருச்சி மாநகராட்சி கமிஷனர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.திருச்சி மாநகராட்சி 61வது வார்டில் உள்ளது காட்டூர் அண்ணா நகர் பகுதியாகும். இங்கு 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் கழிவுநீர் சாலைகளிலும், வீடுகளையும் சுற்றி தேங்கி நின்றது.
இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமலும், சுகாதார முறையில் வாழ முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 35 பேர் கவுன்சிலர் குமார் தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெயாவை நேரில் சந்தித்து, கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அண்ணா நகர் பகுதி மக்களின் அவலத்தை காலைக்கதிர் ஃபோட்டோவுடன் சுட்டிகாட்டியிருந்தது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் காலை மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, செயற்பொறியாளர் அருணாச்சலம், அரியமங்கலம் உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில், “மழைநீர் வடிகாலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவர்களுக்கு உரிய மாற்று இடம் வழங்க’ கமிஷனர் உத்தரவிட்டார்.
அப்பகுதியில், “1.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க’ அதிகாரிகளுக்கு கமிஷனர் தண்டபாணி உத்தரவிட்டார். அதோடு. நேற்றுமுன்தினம் பிற்பகல் முதலே, கழிவுநீரை வெளியேற்றுவதற்கான பணியில் மாநகராட்சி பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டனர்.