மாலை மலர் 01.02.2010
தியாகராயநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகள் மூடப்பட்டன; மேயர் அதிரடி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தியாகராயநகர், வாணி மகாலில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனுக்கள் வாங்கினார். அப்போது தியாகராய நகரில் பஸ் நிலையம் சுற்றியுள்ள மேட்லிசாலை, கில்டுசாலை, நடேசன் சாலை, முத்துரங்கம் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து நடைபாதையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.
மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரிடையாக இப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மேட்லி சாலையில் 5 துரித உணவகங்கள், நடேசன் சாலையில் 4 துரித உணவகங்கள், ஒரு தேநீர் விடுதி, ஒரு சிப்ஸ் கடை, ஒரு குளிர் பானக்கடை ஆகியவையும், கில்டு சாலையில் ஒரு துரித உணவகம் மற்றும் முத்துரங்கம் சாலையில் 2 துரித உணவகங்கள் நடை பாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதை பார்த்தார்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய தற்காகவும் இந்த 15 சாலை யோர கடைகள் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கில்டு சாலையில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளையும் மேயர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றி, சுத்தம் செய்தனர். மாநகராட்சியின் உடனடி நடவடிக்கைக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது மன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, மண்டல அலுவலர் ஞானமணி, உதவி சுகாதார அலுவலர் டாக்டர் சரஸ்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.