தினமலர் 27.08.2010
நெல்லை வீடுகளில் குடிநீர் மோட்டார்15 மின் மோட்டார்கள் பறிமுதல்“: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருநெல்வேலி:நெல்லையில் வீடுகளில் குடிநீர் இணைப்பில் பொறுத்தப்பட்டிருந்த 15 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னை இருந்துவருகிறது. வீட்டுக் குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதாக கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் மாநகரப் பொறியாளர் ஜெய்சேவியர் தலைமையில் செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர்கள் சுல்தானா, சாந்தி கருப்பசாமி, பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ் அடங்கிய குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து 4 மண்டலங்களிலும் திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டிருந்த 15 மின் மோட்டார் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மின் மோட்டார் பொருத்திய இணைப்புகளை துண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்தல், சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் இணைப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீண்டும் இணைப்பு வழங்குவது பரிசீலிக்கப்படாது எனவும் கமிஷனர் சுப்பையன் அறிவித்துள்ளார்.