தினமணி 14.09.2010
பன்றிக் காய்ச்சல்: மாநகரில் 17 மையங்களில் சிறப்பு முகாம்
மதுரை, செப்.13: மதுரை மாநகராட்சிப் பகுதியில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. எனினும், இக்காய்ச்சலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதியில் 17 மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் மேலும் கூறியது:
மதுரை மாநகராட்சிப் பகுதியில் 2010-ல் இதுவரை பன்றிக் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனினும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி பகுதியில் உள்ள டாக்டர், மருத்துவப் பணியாளர்கள் என 100 பேருக்கு “எச்1என்1′ தடுப்பூசி முதல்கட்டமாக போடப்பட்டுள்ளது.
அதிகக் காய்ச்சல், தொண்டைவலி, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
அவர்களுக்கு மதுரை மருத்துவமனையில் தனி சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி சார்பில் செல்லூர், வில்லாபுரம், புதூர், பைகாரா, திடீர்நகர், அகிம்சாபுரம், சந்தைப்பேட்டை, எல்லீஸ்நகர், பெத்தானியாபுரம், கே.கே. நகர், அண்ணாநகர் உள்ளிட்ட 17 இடங்களில், மாநகராட்சியின் நகர் நலவாழ்வு மையங்களில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இக்காய்ச்சல் அறிகுறி உள்ளதாக தெரியவரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம். அவர்களின் ரத்தம், தொண்டைச் சளி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்படும்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளோருக்கு “டாமின்புளு‘ மாத்திரைகள் வழங்கப்படும். தேவைப்படும் போதுமான “டாமின்புளு‘ மாத்திரைகளை இருப்பு வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு நோயின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் மருத்துவக் குழுக்கள் சென்று பரிசோதனையின் மூலமும் இந்நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
பஸ் நிலையங்களில் சிறப்பு முகாம்:
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ்நிலையம், மார்க்கெட், மருத்துவமனை போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, அதற்கு உரிய மாஸ்க் அணிந்து செல்லவேண்டும். மாஸ்க்கை 3 அல்லது 4 தினங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மதுரையில் குறிப்பாக மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்களில் சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு அமைத்து வெளியூரிலிருந்து மதுரைக்குள் நுழையும் பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறியும் சிறப்பு முகாம், இன்னும் 2 தினங்களில் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கூறுகையில், இந்த வைரஸ் காய்ச்சலைக் கண்டு பயப்படத் தேவையில்லை.
இந்நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவேண்டும்.
சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும், காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்றவை ஏற்பட்டால் அருகில் உள்ள நலவாழ்வு மையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.