முதன் முதலாக…செயற்கைக்கோள் மூலம் நகர கட்டமைப்புகள் கணக்கெடுப்பு தாம்பரம் நகராட்சியில் ரூ.18 லட்சம் செலவில் துவக்கம்
தாம்பரம்:தமிழக நகராட்சிகளில் முதல் முறையாக, செயற்கைக் கோள் உதவியுடன், அடிப்படை கட்டமைப்புகளை கணக்கெடுக்கும் திட்டம் தாம்பரத்தில் நேற்று துவக்கப்பட்டது.
வேலூர், துாத்துக்குடி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாநகராட்சிகள்; தாம்பரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ஊட்டி ஆகிய ஏழு நகராட்சிகள் என, மொத்தம் 12 இடங்களில், செயற்கைக்கோள் மூலம், இ.ஜி. ஐ.எஸ்., என்ற நிறுவனத்தின் உதவியுடன் அடிப்படை கட்டமைப்புகளை கணக்கெடுத்து, இணைய தளத்தில் வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது. 12 இடங்களில் கணக்கெடுப்பு நடத்த, மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளியூர்காரர்களுக்கு வசதி
இந்த திட்டத்தை முதன் முதலாக, தாம்பரம் நகராட்சியில் செயல்படுத்த, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகம் முடிவு செய்தது. இதையடுத்து, அமைச்சர் சின்னையா நேற்று இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதன்மூலம், எதிர்காலத்தில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை, குடிநீரை விரிவுபடுத்துதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளை எளிதாகவும் மிக துல்லியமாகவும் திட்டமிட்டு, செயல்படுத்த முடியும்.
வெளியூர்களில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் தாம்பரத்திற்கு வருவோர், கழிப்பிடம், ஓட்டல், தங்கும் விடுதி ஆகியவை எங்குள்ளன என்பதையும், அதற்கான வழியையும், அலைபேசி மூலம் பார்த்து தெரிந்து கொண்டு, பயனடைய முடியும்.
தாம்பரம் நகராட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்த 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு எப்படி?
செயற்கைக்கோள் மூலம் தாம்பரத்தின் முழு நிலப்பரப்பு, படம் பிடிக்கப்படும்
இந்த படத்தில் ஒவ்வொரு கட்டமைப்பு மற்றும் இயற்கை அம்சங்கள் எந்த விதமானவை என்பதை பதிவு செய்ய, திட்ட ஊழியர்கள், ஒவ்வொரு கட்டமைப்பையும் பார்வையிடுவர்
இவர்களிடம் ‘டேப்லெட்’ எனப்படும் கையடக்க, தொடு திரை கணினி இருக்கும். அதில், குறிப்பிட்ட கட்டுமானம் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்வர்
உதாரணத்திற்கு, செயற்கைக்கோள் படத்தில் உள்ள ஒரு கட்டுமானம், ஒரு வீடாக இருந்தால், கணினியில் உள்ள மென்பொருள் மூலம், அது படத்தில் வீடு என, குறிக்கப்படும். இது தவிர அந்த வீட்டில் உள்ள கழிப்பிடம், குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் குறித்த விவரங்களும் பதிவு செய்யப்படும்
இப்படி படத்தில் உள்ள ஒவ்வொரு கட்டமைப்பு பற்றிய விவரமும், கள ஆய்வில் சேகரிக்கப்படும்
பின், படம் பிடிக்கப்பட்ட பரப்பளவில் உள்ள ஒவ்வொரு கட்டுமானம் குறித்த விவரங்கள் அடங்கிய மென்பொருள் தயாராகும். இதன் மூலம், ஆய்வு செய்யப்பட்ட இடம் குறித்த அனைத்து தகவல்களையும் எளிதாக கணினி மூலம் தெரிந்து கொள்ளலாம்
அதன்படி, தாம்பரம் நகராட்சி குறித்த, இத்தகைய வரைபடத்துடன் கூடிய தகவல்கள் தாம்பரம் நகராட்சி இணையதளத்தில் வெளியிடப் படும்
அதேநேரம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில தகவல்கள், இணையதளத்தில் வெளிவராது
கூகுள் வரைபடத்தில் இருப்பதைவிட கூடுதல் தகவல்களை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என, தெரிகிறது
ஆறு மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம், 60 பேர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டுக்கும் சென்று, கையடக்க கணினி மூலம் கணக்கெடுப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.