மாலை மலர் 22.07.2010
நெல்லை மாவட்டத்தில் இன்று 18 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது
நெல்லை, ஜூலை. 22- தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் 40 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் 22 பதவிகளுக்கு போட்டி இல்லாமல் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சத்திரப்பட்டி பஞ்சாயத்து தலைவர், காசிமேஜர்புரம் பஞ்சாயத்து தலைவர், துரைசாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஆகிய 3 பதவிகளுக்கும், சங்கரன்கோவில் நகராட்சி 5-வது வார்டு,புளியங்குடி நகராட்சி 25-வது வார்டு, மானூர் யூனியன் 12-வது வார்டு, பணகுடி பேரூராட்சி 14-வது வார்டு, வடக்கு வள்ளியூர் பேரூராட்சி 16-வது வார்டு, புதூர் பேரூராட்சி 7-வது வார்டு மற்றும் 9 கிராம பஞ்சாயத்து வார்டுகள் உள்பட மொத்தம் 18 பதவிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இந்த 18 பதவிகளுக்கும் மொத்தம் 66பேர் போட்டியிடுகின்றனர். இந்த 18 இடங்களிலும் மொத்தம் 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
48 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காசிமேஜர்புரம், சத்திரப்பட்டி, துரைசாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. காலையிலேயே கடும் கூட்டம் காணப்பட்டது.
இதுபோல நகராட்சி வார்டுகள் பேரூராட்சி வார்டுகள், யூனியன் வார்டுகளிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. நண்பகல் நேரம் சற்று மந்தமாக காணப்பட்டது. கிராம பஞ்சாயத்து வார்டுகளில் அவ்வப்போது வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 18 இடங்களில் உள்ள 48 வாக்குச் சாவடிகளிலும் இன்று அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.