தினகரன் 15.12.2010
விழுப்புரம் பாதாள சாக்கடை பணி பிரதான சாலைகளுக்கு 19ம் தேதி இறுதி கெடு : அமைச்சர் பொன்முடி உத்தரவு
விழுப்புரம், டிச. 15: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடைந்த வீதிகளில் சிமெண்ட் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. பிரதான சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பூந்தோட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் கே.கே. ரோட்டிற்கு அமைச்சர் பொன்முடி நேற்று மாலை வந்தார்.
அமைச்சர் பொன்முடி: பாதாள சாக்கடை திட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பால குமார்: 294 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். 10 நாட்களில் பணிகள் முடிக்கப்படும்.
அமைச்சர் பொன்முடி: டிசம்பர் மாதத்திற்குள் சிமெண்ட் சாலை போட வேண்டும் என்று கூறியிருந்தேன். பணிகளை நீங்கள் துரிதப்படுத்தவில்லை. இரவிலும் பணியை மேற்கொள்ளுங்கள். கூடுதலாக ஆட்களை கொண்டு பணியை தீவிரப்படுத்துங்கள். கே.கே.ரோடு, காமராஜர் வீதி, எம்.ஜி.ரோடு, பாகர்ஷா வீதி களில் வரும் 19ம் தேதிக்குள் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட வேண்டும். சிமெண்ட் சாலை போடும் பணி 20ம் தேதி துவங்க வேண்டும். அப்போது ஆட்சியர் பழனிசாமி, நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, ஓவர்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.