தினத்தந்தி 18.02.2014
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 19–ந் தேதி(புதன்கிழமை) மேயர் சைதை
துரைசாமி தாக்கல் செய்கிறார். இதில் சென்னை மாநகராட்சிக்கான புதிய
திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
பட்ஜெட் தாக்கல்
சென்னை மாநாகராட்சி பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில்
அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு
மார்ச் 11–ந் தேதி, 200 வார்டுகளுக்கும், 3 ஆயிரத்து 630 கோடி ரூபாய்
மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட 126 புதிய திட்டங்கள்
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்ட
பகுதியில் புதிதாக சாலைகளும்அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான விசேஷ கூட்டம்
வருகிற 19–ந் தேதி சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில்
நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட
உள்ளன.
அன்றைய தினமே விவாதம்
இந்த பட்ஜெட் கூட்டம் காலை சரியாக 9.30 மணிக்கு மேயர் சைதை துரைசாமி
தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் விக்ரம்
கபூர், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என
தெரிகிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என
தெரிகிறது. மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
அன்றைய தினம் மதியமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற இருக்கிறது. இந்த
விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி
பேசுவார்.