தினத்தந்தி 25.10.2013
வேலூர் மாவட்டத்தில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 1¼ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருத்த 1¼ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விற்பனைக்கு தடை
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாநகரில் உள்ள
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும கடைக்காரர்களை மாநகராட்சி அதிகாரிகள்
அழைத்து பிளாஸ்டிக் பொருட்களை ஏன்? விற்கக்கூடாது என்பது குறித்து
விளக்கம் அளித்தனர். அத்துடன் மாநகராட்சி அலுவலர்கள் கடை, கடையாகச்சென்று
பிளாஸ்டிக் பொருட்களை விற்கக்கூடாது என்று கூறியதுடன் அது தொடர்பாக
விழிப்புணர்வு நோட்டீசுகளையும் வழங்கினார்கள். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள்
விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அது குறித்து மாநகராட்சி
அலுவலகத்திற்கு ஏராளமான புகார்களும் வந்தன.
அதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ஜானகி
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை
செய்யப்படுகிறதா? என்பதை கண்டுபிடிக்கவும், விற்பனை செய்தால் அந்த
பொருட்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
1 டன் பறிமுதல்
அதன்படி வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல்
அலுவலர் காமராஜ், மாநகர சுகாதார அலுவலர் (பொறுப்பு) முருகன், ஆய்வாளர்கள்
சிவக்குமார், பாலமுருகன், லூர்துசாமி, ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் நேற்று
வேலூர் சுண்ணாம்புகார தெரு, ரொட்டிகார தெரு, கிருபானந்தவாரியார் சாலை
மற்றும் பகுதிகளுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட பல
கடைக்காரர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு சென்று விட்டனர். அதைப்பார்த்த
அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர்.
பின்னர் அதிகாரிகள் அந்த பகுதிகளில்
இருந்த கடைகளுக்கு சென்று அங்கு விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் கேரி
பேக், பேப்பர், கப், டம்ளர் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச்
சென்றனர். அப்போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் மாநகராட்சி
அலுவலர்கள் அதை பொருட்படுத்தாமல் தங்கள் நடவடிக்கையை தொடர்ந்து செய்தனர்.
நேற்று மட்டும் சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர்.
திருப்பத்தூர்
இதே போல திருப்பத்தூரில் உள்ள கடை,
ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சுற்றுச்சூழல் துறை பொறியாளர்
செந்தில்குமார், பொது உதவியாளர் ராஜேந்திரபிரசாத், திருப்பத்தூர் நகராட்சி
ஆணையாளர் சர்தார் ஆகியோர் தலைமையில், துப்புரவு அலுவலர் தமிழ்செல்வன்,
ஆய்வாளர்கள் லிப்டன்சேகர், குமார் மற்றும் ஊழியர்கள் கடை, ஓட்டல்கள்,
வர்த்தக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
இருப்பது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் கடை, ஓட்டகள், வர்த்தக
நிறுவனங்களில் இருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, திருப்பத்தூர்
நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்
பைகளின் எடை 68 கிலோ ஆகும்.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)
ஜி.உமாமகேஸ்வரி, நகர்நல மருத்துவர் பிரியதர்ஷினி, மாசு கட்டுப்பாட்டு
வாரிய உதவி பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையில், துப்புரவு அலுவலர்
ராஜரத்தினம் தலைமையில் தரணம்பேட்டை பஜார், ஜெ.கே.செட்டி தெரு,
ஜி.எச்.ரோடு, சந்தைப்பேட்டை, மேல்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில்
திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 68 கிலோ தடைசெய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது கடைக்காரர்களிடம் தடை செய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறினால் அபராதம்
விதிப்பதுடன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்க
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
சோதனையில் துப்புரவு ஆய்வாளர்கள் பிரகாஷ்,
சிவா, சீனிவாசலு, களப்பணி உதவியாளர் பிரபுதாஸ், மேற்பார்வையாளர்கள்
பென்னிஜோசப், மூர்த்தி, தயாளன், ஜெகன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.
சோதனை தொடர்ந்து நடைபெறும்
வேலூர் மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.