தினத்தந்தி 12.12.2013
சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்

சேலம்
ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ. 1½ கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும்
பணிகளை மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் நேற்று
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தார்சாலை அமைத்தல்
சேலம் டவுன் ஆனந்தா இறக்க உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள்
மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த பாலத்தை விரிவுபடுத்த, தனியாரிடம் இருந்து ரூ. 2½ கோடி மதிப்பில்
நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தி கிரயம் செய்தது. அதன்பிறகு பாலம்
கட்டிமுடிக்கப்பட்டு இருபுறமும் மண்சாலை அமைக்கப்பட்டு பொதுமக்களின்
போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது.
இந்த மண்சாலையில் ரூ. 1½ கோடி மதிப்பில் புதியதாக தார்சாலை அமைத்து மின்
விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை
நேற்று மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், ஆணையாளர் அசோகன்
ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தார்சாலை அமைக்கும் பணிகள்
இன்னும் ஒரு வாரத்திற்குள் முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மேயர் கேட்டுக்கொண்டார்.
ஒரு வாரத்தில் பணிகள் முடியும்
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகனிடம் கேட்டபோது, ஆனந்தா இறக்க
உயர்மட்ட மேம்பாலம் இருபுறமும் ஒரு வாரத்திற்குள் தார்சாலை போடப்பட்டு
விடும். அதைத்தொடர்ந்து கடை வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை
கட்டுப்படுத்த ஆனந்தா புதிய பாலத்தை ஒருவழிப் பாதையாக பயன்படுத்தலாமா? என
போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்,
என்றார்.
இந்த ஆய்வின்போது, மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன்,
கவுன்சிலர்கள் சித்ரா, முருகன், செயற்பொறியாளர்கள் அ.அசோகன், காமராஜ்,
வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, மதுசூதனன், செவ்வாய்பேட்டை நகர
கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
