தினத்தந்தி 12.02.2014
கோவில்பட்டி– சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.1½
கோடி மின்கட்டண பாக்கியை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை நகரசபை
கூட்டத்தில் தீர்மானம்
கோவில்பட்டி– சீவலப்பேரி கூட்டுக்
குடிநீர் திட்டத்தில் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1½ கோடியை
தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று நகரசபை கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகரசபை கூட்டம்
கோவில்பட்டி நகரசபை மாதாந்திர கூட்டம்
மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகரபை தலைவி ஜான்சிராணி தலைமை
தாங்கினார். ஆணையாளர் சுல்தானா, நகரசபை துணை தலைவர் ராமர், நகரமைப்பு
அதிகாரி காஜாமைதீன், வருவாய் அதிகாரி வெங்கடேசன், என்ஜினீயர் ரமேஷ்,
மேலாளர் முத்துக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நகரசபை தலைவி ஜான்சிராணி,
கோவில்பட்டி நகரசபை அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு சட்டசபையில் 5 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜோதிபாசு, நாகராஜ், இருளப்பசாமி, தெய்வேந்திரன்
ஆகியோரும் பேசினார்கள்.
தீர்மானம்
கூட்டத்தில் கோவில்பட்டி 2–வது பைப் லைன்
திட்டத்திற்கு மொத்தம் 81 கோடியே 81 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது. இதில் நகரசபை பங்களிப்பு ரூ.9 கோடியே 6 லட்சம் ஆகும்.
இந்த பங்களிப்பு மற்றும் கடன் தொகையை ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு
குழும திட்டத்தின் கீழ் மானிய கடனாக ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி பெற்று
தருவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே இயங்கி வரும்
கோவில்பட்டி–சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 36 ஆண்டுகளுக்கு முன்பு
தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 27 கிராமங்களுக்கு குடிநீர்
வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எட்டயபுரம், சாத்தூர் போன்ற
பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில்
குடிநீர் வழங்கியதற்கு மின்கட்டண பாக்கியாக ரூ.1 கோடி 37 லட்சத்து 11
ஆயிரம் உள்ளது. அந்த தொகையை மின்வாரியம் கேட்டுள்ளது.
இந்த தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய
வேண்டும் என்று அரசுக்கும், தமிழ்நாடு மின்வாரியத்துக்கும் பரிந்துரை
செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாதாரண கூட்டத்தில் மொத்தம்
46 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 49 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.