தினமலர் 14.08.2012
பாளை., கடைகளில் திடீர் சோதனை 20 கிலோ பளாஸ்டிக் கவர் பறிமுதல்
திருநெல்வேலி:பாளை., பகுதியில் 40 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் குழு நடத்திய திடீர் சோதனையில் 20 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், கப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள், கப்கள் பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி விற்பனை செய்யப்பட்ட கடைகளில் கமிஷனர் மோகன் உத்தரவின் பேரில் பாளை., உதவிக் கமிஷனர் பாஸ்கர், சுகாதார அதிகாரி டாக்டர் முனீஸ்வரி மேற்பார்வையில் பாளை., மண்டலத்தில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு பணியில் சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், முருகன், பெருமாள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் செல்லப்பா, நடராஜன், பேச்சிப்பாண்டியன், சுந்தர்ராஜன், சுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் பாளை., மார்க்கெட், திருச்செந்தூர் ரோடு, கோட்டூர் ரோடு, கிருஷ்ணன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 110 கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் 40 கடைகளில் பயன்படுத்தப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் கவர், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
3 கடைக்காரர்கள் ஓட்டம்பிளாஸ்டிக் கேரிபேக் சோதனை தெரிந்தவுடன் பாளை., மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் கேரிபேக், கப்கள் மொத்தமாக விற்பனை செய்யும் 3 கடையை சேர்ந்தவர்கள் தங்களின் கடைகளை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டனர். இருப்பினும் அந்த கடைகள் திறக்கப்படும் போது சோதனை நடத்தி பிளாஸ்டிக் கவர், கப்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அடிக்கடி இந்த சோதனை தொடரும் எனவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களுக்கு அறிவுரைபிளாஸ்டிக் கேரிபேக், கப்களை பயன்படுத்த வேண்டாம் என பாளை., மார்க்கெட் பகுதியில் பொதுமக்களிடம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மேலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரக்கேடும், சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் அறிவுரை கூறினர்.