தினமணி 18.08.2010
ரயில்வே குகை வழிப் பாதையில் தேங்கும் கழிவுநீர்: 20 ஆண்டுகளாக மேம்பாலம் கோரும் ஆம்பூர் மக்கள்!
ஆம்பூர், ஆக. 17: ஆம்பூர் நகராட்சி–பெத்லகேம் இடையே இருப்புப் பாதையைக் கடக்க மேம்பாலம் இல்லை. இதனால், ஆம்பூர் நகர மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
20 ஆண்டுகால கோரிக்கை எப்போதும் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
ஆம்பூர் நகரையும், பெத்லகேம் பகுதியையும் இரண்டாகப் பிரிக்கிறது அங்கு செல்லும் இருப்புப் பாதை. ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட 28 முதல் 31 வரை உள்ள 4 வார்டுகள், பெத்லகேம் பகுதியில் அமைந்திருக்கின்றன. இங்கு மட்டுமே சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், பெத்லகேமுக்கு அப்பால் நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய மலை கிராமங்களும் உள்ளன.
பெத்லகேம் பகுதியில் மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையம், தனியார் கல்லூரி, 2 ஆங்கிலப் பள்ளிகள், நகராட்சி தொடக்கப்பள்ளி, நிதியுதவி தொடக்கப்பள்ளி, காவலர் குடியிருப்பு, பெதஸ்தா மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதுதவிர, ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் அங்கு உள்ளன.
இப்பகுதிக்குச் செல்வோர் ஆம்பூர் பஸ் நிலையத்துக்கு எதிரே இருக்கும் குறுகலான குகைவழிப் பாதையையே பயன்படுத்துகின்றனர். இதில் இருசக்கர வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்.
இதேபோல, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டுமெனில், ஆம்பூர் புறவழிச்சாலை அருகே இருப்புப் பாதைக்குக்கீழ் உள்ள மற்றொரு குகை வழிப்பாதையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இரு குகைவழிப் பாதைகளும் தரை மட்டத்திலிருந்து தாழ்வாகவே அமைந்திருப்பதால், மழை நீர் மட்டுமல்லாது சாக்கடைக் கழிவு நீரும் இங்கு வந்து தேங்கி நிற்கிறது.
இதனால், நடந்து செல்லும் பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்தாமல், நேரடியாக இருப்புப் பாதையைக் கடந்து செல்கின்றனர். சிலர் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு ரயிலின் அடியில் புகுந்து பாதையைக் கடக்கின்றனர். இதனால் சிலர் விபத்துகளில் சிக்கி இறப்பதும் தொடர்கிறது.
பலத்த மழை பெய்யும் நேரங்களில் ஆம்பூரிலிருந்து பெத்லகேம் பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டுவிடும்.
அதுபோன்ற சமயங்களில் மின்சாரத்துக்காக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.
இரு குகைவழிப் பாதைகளிலும் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இப்பாதை எப்போதும் இருள்சூழ்ந்து காணப்படும். இரவு நேரத்தில், இப்பாதையைக் கடப்பது மிகவும் ஆபத்தான செயல் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.
20 ஆண்டு கோரிக்கை: பெத்லகேம் பகுதிக்கு மேம்பாலம் அமைத்துத்தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களோடு, மக்கள் பிரதிநிதிகளும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பல முறை மனுக்கள் அனுப்பியுள்ளனர்.
ஆனால், ரயில்வே துறையினர் இடத்தை ஆய்வு செய்ததோடு சரி; மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை..
எனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர் இப்பகுதி மக்கள். நடவடிக்கை எடுக்குமா மத்திய, மாநில அரசுகள்?