தினகரன் 30.07.2010
புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்க நாமக்கல்லுக்கு 23ம் தேதி துணை முதல்வர் வருகை நகராட்சி கூட்டத்தில் தகவல்
நாமக்கல், ஜூலை 30: நாமக்கல் நகராட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்கு தலைவர் செல்வ ராஜ் தலைமை தாங்கினார். இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து தலைவர் பேசியதாவது: நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டப்பணி நிறைவடைந்துவிட்டது. வருகிற 23ம் தேதி நாமக்கல் வருகைதரும் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். எரிவாயு தகனமேடை, நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். நகராட்சியில் உள்ள சாலைகள் பீ5 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு துணை முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கும்.
பாதாள சாக்கடை அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவில் முடிக்குமாறு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.
நகராட்சி பகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள ஆடு, கோழி, மீன் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட உள்ளது. நகராட்சி தினசரி மார்க்கெட்டில் அமைய உள்ள வணிக வளாகத்தில் இவை இடம்மாற்றம் செய்யப்படும்.
இதுபோல் மாட்டு இறைச்சி கடைகளை நகரை விட்டு வெளியே ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மணல் லாரிகள் நகருக்குள் வருவதை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் செல்வராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முகமதுமூசா, நகராட்சி துணைத்தலைவர் பூபதி, உறுப்பினர்கள் பால்ரவி, ஆறுமுகம், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.