தினகரன் 10.09.2010
டிஜிட்டல் பேனர் விவகாரம் 23க்குள் அறிக்கை அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவு
சென்னை, நவ.10: டிஜிட்டல் பேனர் விவகாரம் தொடர்பாக, 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபாதை மற்றும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாததால், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், வினோத்குமார் சர்மா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன், ‘‘டிஜிட்டல் பேனர்களை கட்டுப்படுத்த மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்த சட்டத்தை தாக்கல் செய்ய போதிய அவகாசம் இல்லை. திருத்த சட்டம் இன்னும் தயாரிக்கப்படவில்லை. எனவே, அடுத்த கூட்டத்தொடரில் இது தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “சென்னை நகரில் இதுவரை விதிமுறையை மீறி எத்தனை டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன? அவை அப்புறப்படுத்தப்பட்டதா? டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த அறிக்கையை, வரும் 23ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.