தினகரன் 30.09.2010
ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ2.4 கோடி ஒதுக்கீடு நகர்மன்ற தலைவர் தகவல்
ராசிபுரம், செப்.30: ராசிபுரம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரங்கசாமி, ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் பரமசிவம், மேலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு தலை மற்றும் கையில் மருத்துவ கட்டுடன் வந்த 8வது வார்டு உறுப்பினர் சீனிவாசன் (அதிமுக), தலைவர் மற்றும் ஆணையாளரிடம் மனு அளித்தார். அப்போது அவர், நான் உறுப்பினராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு பணிகளுக்காக மனுக்களை அளித்துள்ளேன். அந்த பணிகளுக்காக டெண்டர் விடப்படுகிறது. பணிகள் துவங்கும்போது போதிய நிதி நிலை இல்லை என காரணம் கூறி நிறுத்தப்படுகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதை எடுத்துரைக்கும் விதமாகவே தலை மற்றும் கையில் மருத்துவ கட்டுடன் வந்ததாக கூறினார்.
இதற்கு பதிலளித்து தலைவர் பேசுகையில், “ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சாலைகள் அமைப்பதற்கு அரசு ரூ2 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 10 கான்கிரீட் சாலை, 37 தார்சாலை அமைக்கப்படும். விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள் ளது. வார்டு வாரியாக சென்று ஆய்வு செய்து அங் குள்ள குறைகள் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும்“ என்றார்.
பாலு (திமுக):
ராசிபுரம் நகரில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீரும் குறைவாக வருகிறது. தண்ணீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும்.
தலைவர்:
போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராம்குமார் (திமுக):
ராம்நகரில் உள்ள கிணற்றில் போதிய தண்ணீர் இருந்தும் தூர்வாராமல் அசுத்தமாக உள்ளது. இதை தூர்வார வேண்டும்.
தலைவர்:
வருகிற சனிக்கிழமைக்குள் சரிசெய்யப்படும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன. இந்த கூட்டத்தின் முடிவில், நகராட்சி பகுதிகளில் முக்கிய இடங்களில் சாலையோரம் பிளக்ஸ்போர்டுகள் வைப்பதற்கு தடை விதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.