தினமணி 24.08.2009
வீராணம் ஏரி: சென்னை குடிநீருக்கு 25 கன அடி
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீராக அனுப்புவதற்காக, சுத்திகரிக்கப்படும் பண்ருட்டியை அடுத்த வடக்குத்து நீரேற்று நிலைய குடிநீர் தொட்டி.
கடலூர், ஆக. 23: வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
பாசனத்துக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 26) திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கொள்ளிடம் கீழணையில் இருந்து, காவிரி நீர் கிடக்கிறது. நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை ஆகியவற்றின் வழியாக மழைநீர் கிடைக்கிறது.
2,200 கன அடி தண்ணீரைத் தாங்கும் திறன் கொண்ட வடவாறு வழியாக, தற்போது 550 கன அடி நீர், வீராணம் ஏரிக்குத் திறந்து விடப்பட்டு இருக்கிறது.
இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை 43.3 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 47.5 அடி) வீராணம் ஏரியில் மொத்த ஆயக்கட்டு 45 ஆயிரம் ஏக்கர். இந்த 45 ஆயிரம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி முழுமையாக நடந்து முடிய, வீராணம் ஏரி 18 முறை நிரம்ப வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44 அடியை எட்டும் போது, பாசனத்துக்குத் திறக்க முடியும்.
வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால்கள் 34. இவற்றில் 6 வாய்க்கால்கள் எதிர்கரையில் உள்ளன. வீராணம் ஏரி முழுமையாக நிரம்பினால் தான், இவற்றில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க முடியும். ஏனைய 28 வாய்க்கால்களும் 26-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
28 வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்க வேண்டுமானால், 900 கன அடி தண்ணீர் தேவைப்படும். தற்போது சம்பா பயிருக்கு நிலத்தைப் பண்படுத்துதல், நாற்று பாவுதல் போன்ற பணிகளுக்கு, 400 கன அடி மட்டும் திறக்கப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக் குடிநீர் திட்டத்துக்கு வீராணம் ஏரியில் இருந்து, 78 கன அடி நீர் வழக்கமாக அனுப்பப்படும். சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது, 21-5-2009 முதல் நிறுத்தப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது.
முதல் கட்டமாக இந்த நீரைக் கொண்டு, பூதங்குடியில் உள்ள நீரேற்று நிலையங்கள், வடக்குத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், மற்றும் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
சுத்தம் செய்யும் பணி முடிவடைந்ததும், கூடுதல் தண்ணீர் சென்னைக் குடிநீர் திட்டத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகே சென்னை நகருக்கு வீராணம் நீர் கிடைக்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.