பரமக்குடியில் குடிநீர் திருட்டு: 25 மின் மோட்டார்கள் பறிமுதல்
பரமக்குடி நகரில் வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் திருடியதாக 25 மின்மோட்டார்களை நகராட்சி ஆணையர் கே. அட்ஷயா சனிக்கிழமை பறிமுதல் செய்தார்.
வறட்சி காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் போதிய அளவு வரப்பெறாததால், கள்ளிக்கோட்டை பகுதியில் கிடைக்கும் குடிநீரை நகராட்சி நிர்வாகம் பரமக்குடி நகர் மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
குடிநீர் விநியோகம் செய்யும்போது பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டார் பொறுத்தி குடிநீர் எடுத்து வருவதாக நகராட்சிக்குப் புகார்கள் வந்துள்ளன.
இதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கே. அட்ஷயா தலைமையில் பொறியாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளர்கள் திருவள்ளுவர் நகர், பங்களா சாலை, பள்ளிவாசல் தெரு, திருவரங்கம் மெயின் சாலை ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து வந்த 25 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து ஆணையர் கே. அட்ஷயா கூறுகையில், குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொறுத்தி முறைகேடாகக் குடிநீர் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவரது குடிநீர் இணைப்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படுவதுடன், காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.