தினமலர் 14.10.2010
பட்டாவுக்கான இடம் பெற 27 ஆண்டுகள்! அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சி முடிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கிய பட்டாவுக்கான இடம், மக்களின் தொடர் போராட்டத்தால் 27 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க, பேரூராட்சிக்கு உட்பட்ட குஞ்சிபாளையம் பிரிவு அருகே ஆதிதிராவிட நலத்துறை மூலம் 4.91 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அங்கு, 85 பேருக்கு தலா மூன்று சென்ட் இடம் கொடுப்பதற்காக இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கடந்த 1983ல், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., நெகமத்தில் நடந்த விழாவில் வழங்கினார்.இலவச பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்ட இடத்தை வழங்க மறுத்து நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெற்றதால், பட்டாவுக்கான நிலத்தை அளந்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை மூலம் கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றாக வேறு இடம் கொடுப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட இடத்தை வழங்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் நிலத்தின் உரிமையாளர் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டதால், நீதிமன்ற தடை உத்தரவு நீடித்தது.
இந்நிலையில் கடந்த 2000ல், உயர்நீதிமன்ற தடை உத்தரவு விலக்கப்பட்டு அரசுக்கு சாதகமாக தீர்ப்பானது. அதன்பின், ஆதிதிராவிட நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு இடம் அளந்து வழங்கப்பட்டது. மொத்த பயனாளிகள் 85 பேரில், 60 பேரின் பட்டாவுக்கான நிலம் அளந்து கொடுக்கப்பட்டது. அப்போது, நில உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
பட்டாவுக்கான நிலம் பெற்றவர்கள் அங்கு குடிசை மட்டுமே அமைக்க முடிந்தது. பட்டா வைத்திருந்த 25 பேருக்கு நிலம் அளந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலத்தின் மீது நீதிமன்ற தடை உத்தரவு அமலில் இருந்ததால் தெருவிளக்கு, ரோடு, சாக்கடை, குடிநீர், மின் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2004ல் அங்கு வசிக்கும் மக்களுக்கு சொத்துவரி விதித்து அங்கீகாரம் வழங்கியது.இந்நிலையில், கடந்த 2009 ஜூன் மாதம் நீதிமன்ற தடை உத்தரவு நிரந்தரமாக விலக்கிக்கொள்ளப்பட்டு, மேல் முறையீட்டிற்கு செல்ல முடியாதபடி உத்தரவிடப்பட்டது. அதையடுத்து மின்வாரிய பொறியாளர் சிவலிங்கம் வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கினார். 1983ல் இருந்து 2009ம் ஆண்டு வரையிலும் இருந்த நீதிமன்ற தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதால் பட்டாவுக்கான நிலம் அளவு செய்து கொடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.ஆதிதிராவிட நலத்துறை தனித்தாசில்தார் சாந்தாதேவி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் லிங்கம்மாள், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் ஜெயராமச்சந்திரன், கவுன்சிலர்கள் வெள்ளைச்சாமி, சுப்பிரமணி, காளீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி 24 பேருக்கு புதிதாக பட்டா வழங்கினார்.பேரூராட்சி தலைவர் கூறுகையில், “25 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் மக்களால் அங்கு வீடுகட்ட முடியவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கும் தடையாக இருந்த நீதிமன்ற உத்தரவு விலக்கப்பட்டதால், அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.மக்களுக்கு தேவையான குடிநீர், சாக்கடை, சாலை, தெருவிளக்கு, பொதுக்கழிப்பிடம், இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.