கணித மேதை ராமானுஜன் பெயரில் வீதி:27-ஆவது வார்டு கவுன்சிலர் கோரிக்கை
கணித மேதை ராமானுஜன் பிறந்த வீடு இருக்கும் அழகர்சிங்கர் வீதியை ராமானுஜன் வீதி என்று பெயர் மாற்ற வேண்டும் என, ஈரோடு மாநகராட்சி 27-ஆவது வார்டு கவுன்சிலர் (சுயேச்சை) ராதாமணி பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சி, 27-ஆவது வார்டுக்கு உள்பட்ட கோட்டை, தெப்பக்குளம் மைதானத்துக்கு அருகிலுள்ள அழகர்சிங்கர் வீதியில் குடியிருந்த சீனிவாச அய்யங்கார்- கோமாளத்தம்மாள் தம்பதியினருக்கு 1887-ல் ராமானுஜன் மகனாகப் பிறந்தார்.
உலகப் புகழ் பெற்ற கணிதமேதை பிறந்ததை நினைவுகூரும் வகையில், அவர் பிறந்த வீட்டை கணித அருங்காட்சியகமாக மாற்ற மாநகராட்சி முடிவுசெய்துள்ளது வரவேற்புக்குரியது.
ராமானுஜன் பிறந்த வீடுள்ள அழகர்சிங்கர் வீதிக்கும், தெப்பக்குளம் மைதானத்தைச் சுற்றியுள்ள கொத்துக்காரநல்லா வீதியின் ஒரு பகுதி வீதிக்கும் “கணிதமேதை ராமானுஜன் வீதி’ என்று பெயர் சூட்ட வேண்டும்.
மேலும் ஈரோடு மாநகரில் கணிதப் பூங்காவை அமைக்க வேண்டும். கணிதமேதை ராமானுஜனுக்கு அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.