தேர்வு முடிவுகள் விடுபட்ட மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியருக்கு மே 27-ல் மதிப்பெண் பட்டியல்: கல்வி அலுவலர் தகவல்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விடுபட்ட மதுரை மாநகராட்சி பொன்முடியார் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 54 பேருக்கும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மே 27-ம் தேதி மதிப்பெண் பட்டியல் முறையாக வழங்கப்படும் என மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகராஜ் தெரிவித்தார்.
கடந்த மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகளையும், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் பழனிச்சாமி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி ஆகியோர் வெளியிட்டனர்.
இதில், மதுரை மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 54 பேரின் தேர்வு முடிவுகள் விடுபட்டிருந்தன.
இதனால், மாணவியரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக இணை இயக்குநர் பழனிச்சாமி, சென்னை தேர்வுகள் துறை இணை இயக்கநருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக, தேர்வுகள் துறையில் இருந்து, மின்னஞ்சல் மூலம் 54 மாணவியரின் தேர்வு முடிவுகளையும் அனுப்பி வைத்தனர்.
இந்த மின்னஞ்சல் பொன்முடியார் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
இதில், மாணவியரின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்கள் தெரிவிக்கப்பட்டனவே ஒழிய, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இதனால், தேர்ச்சி பெற்ற மாணவியர், உயர்கல்விக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், குழப்பமடைந்த மாணவியரின் பெற்றோர், மதிப்பெண் சான்றிதழைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் கோரினர்.
இதனைத் தொடர்ந்து, தேர்வுகள் துறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் மாணவியரின் மதிப்பெண்களை தனித்தனி பட்டியலாகத் தயாரித்து, முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலர் மதியழகராஜ் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேர்வுத்துறை மூலம் முறையான மதிப்பெண் பட்டியல் பெறப்பட்டு மே 27 ஆம் தேதி விநியோகிக்கப்படும். எனவே, மாணவியரும், பெற்றோரும் குழப்பமடைய தேவையில்லை, என்றார்.