தினமணி 14.12.2009
நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் உள்ள ரூ.28 கோடி வரியை வசூலிக்க “சமரசக் குழு‘ அமைப்பு
மதுரை,டிச. 13: நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் உள்ள ரூ.28 கோடி வரியை வசூல் செய்ய மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் “சமரசக் குழு’ அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சொத்துவரி சம்பந்தமாக பல்வேறு காரணங்களுக்காக வடக்கு மண்டலத்தில் 41 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 21}ம், மேற்கு மண்டலத்தில் 22}ம், தெற்கு மண்டலத்தில் 178 வழக்குகள் என மொத்தம் 312 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை வரித் தொகை வசூல் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.
இதன் காரணமாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களை அழைத்துப் பேசி சமூகத் தீர்வு ஏற்படும் வகையில் “சமரசக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் உதவி கமிஷனர் (வருவாய்), மண்டல உதவி கமிஷனர்கள், சட்ட அலுவலர்கள், முதன்மை நகரமைப்பு அலுவலர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு மண்டலமாக, வழக்குத் தொடர்ந்தவர்களை அழைத்துப் பேசி, சட்டத்துக்கு உள்பட்டு சமரசத் தீர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.