தினமணி 21.04.2010
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோர் குறித்து 30 நாளில் அறிக்கை–சரத் பவார்
புது தில்லி, ஏப்.20: நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறித்த புதிய அறிக்கையை மத்திய திட்டக் குழு இன்னும் ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யும் என்றார் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் மத்திய திட்டக் குழுவுக்கு மட்டுமே உண்டு. அந்தவிதத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறித்த புதிய அறிக்கை தாக்கல் செய்யும் பணியில் அது ஈடுபட்டுள்ளது. 30 நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
திட்டக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில்தான் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் உணவுதானிய பற்றாக்குறை நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளதே என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், அனைத்து மாநிலங்களுக்குமே பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் போதுமான உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் மாநில அரசுகள்தான் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உணவுதானியத்தைவிட குறைவாக எடுத்துக் கொள்கின்றன. இதனால் உணவுதானிய பற்றாக்குறைக்கு மத்திய அரசு பொறுப்பல்ல; மாநில அரசுகளே காரணம் என்றார்.
பிகாரிலும் ரேஷன் கடைகளில் உணவுதானியப் பற்றாக்குறை நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டினார்.இதற்கு பதில் அளித்த சரத் பவார், பிகாரையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. அந்த மாநிலத்துக்கும் போதுமான உணவுதானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிகாரும் பிற மாநிலங்களைப் போல தங்களுக்கு ஒதுக்கீடு செய்த உணவுதானியத்தை முழுவதும் எடுத்துக் கொள்ளவில்லை. 2009-10-ல் பிகாருக்கு 34.56 லட்சம் டன் உணவுதானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 20.51 லட்சம் டன் உணவு தானியத்தை மட்டுமே பிகார் எடுத்துக்கொண்டது என்றார்.