தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரில் ரூ.33 லட்சத்தில் மழைநீர் கால்வாய்
கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகரில் ரூ.33.30 லட்சம்
செலவில் கான்கிரீட்டால் ஆன மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் வே.முத்துகுமரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, செயல் அலுவலர் மணிவேல், துணைத் தலைவர் கோமளா கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பேரூராட்சியின் வரவு செலவு இருப்புக் கணக்கு,
பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பிறப்பு இறப்பு கணக்கு
சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ம.பொ.சி
நகரில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின்கீழ் 590 மீட்டர்
அளவில் கான்கிரீட்டால் ஆன மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்படும் என்றும்,
அதற்கான ஒப்பந்த விவரம் குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ஈசா ஏரிக்கரையை ஒட்டி
கிறிஸ்தவர்களுக்கான மயான பூமிக்கான இடஒதுக்கீடு செய்து தரக்கோரி
வட்டாட்சியரை கேட்டுக் கொள்வது என கிறிஸ்தவ ஐக்கிய சங்கத்தின் மூலம்
வரப்பெற்ற கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய கவுன்சிலர் தீனதயாளன், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு
சாலையில் உள்ள திருமண மண்டபங்கள் வாகனங்கள் நிறுத்த போதிய வசதிகள் இல்லாத
நிலையில் திருமணங்களுக்கு வருபவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அந்த நேரத்தில் போக்குவரத்தை
ஒழுங்கப்படுத்த திருமண மண்டப உரிமையாளர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை
என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் அறிவழகன், வடிவேலு, பாலசுப்பிரமணியம்,
வெங்கடேசன், சிராஜுதின், வெண்ணிலா சண்முகவேல், சரஸ்வதி, லட்சுமி ராஜா
ஆகியோர் பேசினர்.