தினமணி 27.01.2010
குடியரசு தின விழாவில் 35 கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி
தக்கலை, ஜன. 26: பத்மநாபபுரம் நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 35 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை நகர்மன்றத் தலைவர் அ.ரேவன்கில் ஏற்றினார். பின்னர் நடைபெற்ற விழாவில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதி உதவித் திட்டத்தின் கீழ் 35 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் அதற்கான காசோலைகளை நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் ஆணையர் செல்லமுத்து, சுகாதார அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் முருகேசன், நகர்மன்ற துணைத் தலைவர் முகமதுசலீம், உறுப்பினர்கள், விஜயகோபால், பீனா, ஹரிகுமார், முகமதுரஷீது, முகமதுராபி, முகமது உவைஸ், உண்ணிகிருஷ்ணன், ரேணுகா, மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மோகன், மில்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட தடயங்கள் பண்பாட்டுக் கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு துணைத் தலைவர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் தேசியக் கொடியை ஏற்றினார் ரெவரன்ட் டென்னிசன் இனிப்புகளை வழங்கினார். இதில், நிறுவனர் தர்மராஜ் மற்றும் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தடிக்காரன்கோணம் ரூபன் கல்வி நிறுவனங்களின் சார்பில் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ரூபன் கல்வி நிறுவனச் செயலர் சந்திரகாலா ஏற்றிவைத்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில், ரூபன் மெட்ரிக் பள்ளி முதல்வர் அர்னால்டு–டி– ஜோசப், பி.எட். கல்லூரி முதல்வர் சுப்பிரமணிய தங்கம், விரிவுரையாளர் நிர்மல் தம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆர்.டி.ஓ. முருகவேல் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடியை வட்டாட்சியர் பால்சுந்தர்ஜான் ஏற்றிவைத்தார் இதில், தக்கலை கிராம அலுவலர் தங்கதுரை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) லீலாபாய் தலைமை வகித்தார். பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் பொன்.பால் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
நகர்மன்றத் தலைவர் ரேவன்கில், ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி பிரபகுமார் தலைமையில் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில், சாரண சாரணியர், மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் பங்கேற்றனர்.
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை கல்லூரித் தாளாளர் எச்.முகமது அலி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் வி.எபனேசர் தலைமை வகித்தார். இதில், கல்லூரித் தலைவர் எஸ்.செய்யது முகமது, கல்லூரி நிர்வாக நிதிக் காப்பாளர் அப்துல்ரஹீம், கல்லூரி செயற்குழு உறுப்பினர் யூசப், பெரோஷ்கான் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.