கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை 39 கட்டிடங்களுக்கு ‘சீல்’ அதிகாரிகள் தகவல்
கோவை மாநகராட்சி பகுதியில் இதுவரை 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கலெக்டர் உத்தரவு
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பெண்கள் பலியானார்கள். அந்த வணிக வளாகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்படாததே விபத்துக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த வணிக வளாகத்தை இடிக்க உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதுபோன்று மாவட்டம் முழுவதும் 201 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவைகள் அனைத்தையும் சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருக்கும் பொதுகட்டிடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
குழுக்கள் அமைப்பு
இதைத் தொடர்ந்து கோவை மாநகரம், மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பொது கட்டிடங்களை கணக்கெடுக்க 14 தாசில்தார்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை, நகரமைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் 55 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்தது. அவற்றை சீல்வைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று திருச்சி ரோட்டில் உள்ள ஒரு கட்டிடம் உள்பட 3 கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–
39 கட்டிடங்களுக்கு சீல்
கலெக்டர் உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் முதல் நாளில் 12 வணிக வளாகங்களுக்கும், 2–வது நாளில் 15 கட்டிடங்களுக்கும், 3–வது நாளில் 9 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இன்று (நேற்று) 3 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 14 கட்டிடங்கள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் வங்கிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வருவதால் அவற்றை 15 நாட்களுக்குள்ளும், கடைகளை 24 மணி நேரத்தில் காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. கொடுக்கப்பட்டு உள்ள நாட்களுக்குள் காலி செய்யாவிட்டால் வருகிற 7–ந் தேதிக்குள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.