திருச்சி மாநகரில் வறட்சியை சமாளிக்க ரூ.3½ கோடியில் குடிநீர் பணிகள் மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு
திருச்சி மாநகராட்சியில் வறட்சியை சமாளிக்க குடிநீர் தேவைக்காக ரூ.3 கோடியே 59 லட்சம் செலவிலான குடிநீர் பணிகளை மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேயர் ஜெயா ஆய்வு
திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.3 கோடியே 59 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும், கம்பரசம்பேட்டை அருகே காவிரி ஆற்றில் மாநகராட்சிக்கான தலைமை நீரேற்று பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையும் கோட்ட தலைவர்கள், பொறியாளர்களுடன் மேயர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.3½ கோடி
திருச்சி மாநகராட்சியில் கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.3 கோடியே 59 லட்சம் (வறட்சி நிவாரண திட்டத்தில்) வழங்கி இருக்கிறார். இதன் மூலம் கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் 60 அடி ஆழத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளும், புதிதாக மின்மோட்டார் மற்றும் மின்சார கேபிள் வயர்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கைப்பம்புகள் பொருத்தும் பணி
மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் கைப்பம்புகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் பற்றாக்குறை உள்ள 50 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் வைத்து லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் பவர் பம்புகள் பொருத்தி தேவையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக, 5 புதிய ஜெனரேட்டாகள் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பில் வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி லாரிகள் மூலமும், 4 வாடகை லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுப்பாடின்றி ஒவ்வொரு நாளும் வழங்குவதற்கான அனைத்து பணிகளும் முதல்–அமைச்சர் உத்தரவின்படி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
ஆய்வின்போது, கோட்ட தலைவர்கள் லதா, சீனிவாசன், ஞானசேகரன், மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன், உதவி கமிஷனர் ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதனைதொடர்ந்து கோ.அபிசேகபுரம் கோட்டம் களத்துமேடு பகுதியில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கைப்பம்பு அமைக்கப்பட்டுள்ளதையும், குளத்துமேடு பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டிய பணிகளையும் மேயர் ஜெயா பார்வையிட்டார்.