கோவில்பட்டியில் அதிரடி சோதனை திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய 40 மின் மோட்டார்கள் பறிமுதல் தலா ரூ.12 ஆயிரம் அபராதம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சிய 40 மின் மோட்டார்களை நகராட்சி பொறியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கோவில்பட்டிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதமாக நகரில் 15 அல்லது 18 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தாண்டு பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீராதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. தெருக்களில் உள்ள அடிபம்புகளில் தண்ணீர் வருவதில்லை. பெரும்பாலான மக்கள் டிராக்டர், லாரிகள் மூலம் விற்கப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு சிலர் நீண்ட தூரங்களுக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று ஒரு குடம் தண்ணீர் ரூ.3 முதல் ரூ.5 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இதற்கிடையே குடிநீர் விநியோகிக்கப்படும் நேரத்தில் சிலர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் வரதராஜன் தலைமையில் பொறியாளர் சுப்புலட்சுமி, உதவி பொறியாளர் குறள் செல்வி மற்றும் பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
இதில் நடராஜபுரம், காந்திநகர், புதுரோடு, வக்கீல்தெரு, ஜோதிநகர், வஉசி நகர், பசுவந்தனைரோடு, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய 40 மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய குடிநீர் இணைப்புதாரர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுபோல் மோட்டார் வைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பது தெரியவந்தால் குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் வரதராஜன் எச்சரிக்கை விடுத்தார்.