தினகரன் 10.01.2011
பெரம்பூரில் கட்டப்படுகிறது ரூ. 48 கோடி செலவில் நவீன இறைச்சிக் கூடம்
சென்னை, ஜன.10:
சென்னையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன இறைச்சி கூடம் பெரம்பூரில் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய 2 இடங்களில் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் இறைச்சிக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. பெரம்பூரில் உள்ள இறைச்சிக் கூடம் 1903ம் ஆண்டு கட்டப்பட்டது.இதை மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன இறைச்சிக் கூடம் கட்டப்படு வருகிறது.
இங்கு ஆய்வகம், பொது கூடம், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் அறைகள், ஆடுகளை நவீன முறையில் வெட்டுவதற்கான தனி அறைகள், மாடுகள் வெட்டுவதற்கு தனி வசதி, வாகன நிறுத்துமிடம் இருக்கும். இறைச்சிக் கூடத்தை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில், அந்த வளாகத்திலேயே அழகிய பூங்காவும் உருவாக்கப்படுகிறது. 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடியும்.
ரூ. 48 கோடி செலவில் தனியார் மூலம் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் இது கட்டப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வருவாய் கிடைக்கும்.