தினமணி 20.08.2009
கேரள உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு
திருவனந்தபுரம், ஆக. 19: கேரள மாநில உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அந்த மாநில அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறியதாவது:
மகளிருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டு வருவதற்காக சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8-ம் தேதி முதல் 17-ம் வரை நடைபெறும் என்றார்.
தற்போது கேரள உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்கத் தேவையான சட்டத் திருத்தம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த விஷயத்தில் பிகார், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளன.
பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் நிலைக்குழுக்கள் போன்ற உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க இதன் மூலம் வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏராளமான நலத் திட்டங்கள் மகளிரையும், குழந்தைகளையும் சார்ந்தே அமைகின்றன. இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படுகின்றன என்றார்.
கேரள மாநிலத்தில் தற்போது 999 கிராமப் பஞ்சாயத்துகள், 152 வட்டாரப் பஞ்சாயத்துகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 53 நகராட்சிகள், 5 மாநகராட்சிகள் உள்ளன.