சென்னை நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் 50 ஆயிரம்:வெள்ள பாதிப்பை தடுக்க படிப்படியாக அகற்ற முடிவு

சென்னை:சென்னையில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள நீர் வழித்தடங்களில் 50 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவற்றால் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்து, படிப்படியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கணக்கெடுப்பு:சென்னையில் அடையாறு, கூவம் ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் உட்பட ஐந்து பெரிய நீர் வழித்தடங்கள் பொதுப்பணித் துறை வசமும், இதர 31 சிறிய நீர்வழித்தடங்கள் சென்னை மாநகராட்சி வசமும் உள்ளன. இந்த நீர்வழித்தடங்கள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.இதனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், குடிநீர் பிரச்னையும் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வுகாண நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்ற மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும் முடிவு செய்துள்ளன. இதற்காக ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.
மாநகராட்சியில் 20 ஆயிரம்:இந்த கணக்கெடுப்பில், பொதுப்பணித் துறை நீர் வழித்தடங்களில் 30 ஆயிரம் ஆக்கிரமிப்புகளும், மாநகராட்சி நீர்வழித்தடங்களில் 20 ஆயிரம் ஆக்கிரமிப்புகளும் இருப்பது தெரியவந்துள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கப்பட வேண்டும். இதனால் படிப்படியாக மாற்று வீடுகளை ஒதுக்கீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல்கட்டமாக 6,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.இதற்காக “பயோ மெட்ரிக்’ முறையில் ஆக்கிரமிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். வரும் ஜூலை மாதத்திற்குள் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் தயாராகி விடும்.இது குறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் கூறியதாவது:நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று வீடு ஒதுக்குவதற்கு இது சரியான நேரம். இதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களின் குழந்தைகளை புது இடத்தில் பள்ளியில் சேர்க்க வசதியாக இருக்கும். மேலும், பருவமழை துவங்குவதற்கு முன்பே, முக்கியமான நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இந்த ஆண்டு அகற்ற வேண்டிஉள்ளது. முதல்கட்டமாக 6,000 வீடுகள் நீர் வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட உள்ளன. மற்ற ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாழ்வான இடங்கள் 291:அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள “ரிமோட் சென்சிங்’ துறை மூலம் சென்னையில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், நீர் வழித்தடங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதால், கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட தாழ்வான பகுதிகள் குறித்த புள்ளிவிவரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புதிய கணக்கெடுப்பின் படி, சென்னையில் 291 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில், அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம், செங்குன்றம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டிய பகுதிகள் அடக்கம்.இந்த பகுதிகளுக்காக 156 நிவாரண மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வெள்ள காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.