தினமணி 26.04.2010
பணி துவங்கினால் மண்டலங்களுக்கு 51 நாள் மட்டும் தண்ணீர் கிடைக்கும்
பொள்ளாச்சி, ஏப். 25: பரம்பிக்குளம்– ஆழியாறு பாசனத் திட்டத்தின் முக்கிய அங்கமான காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பணி துவங்கினால், 4 மண்டலங்களுக்கு மொத்தம் 2 ஆண்டுகளுக்கு தலா 51 நாள்கள் மட்டும் தண்ணீர் கிடைக்கும். பணிகள் நடக்கும் ஜன. முதல் ஜூன் வரையிலான காலத்தில், தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
÷பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் சுரங்கப்பாதையில் சர்க்கார்பதி கொண்டு வரப்படுகிறது.
÷இந்தத் தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைக்கப்பட்ட காண்டூர் கால்வாய் மூலம் சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்தி அணைக்குச் செல்கிறது. அங்கிருந்து ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
÷ஒவ்வொரு மண்டலத்துக்கும் இருப்பில் உள்ள தண்ணீரைப் பொறுத்து, 80 முதல் 90 நாள்கள் தண்ணீர் கிடைக்கும். இதில் மழையளவு அதிகரிக்கும்போது கூடுதல் நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும். எதிர்பார்க்கும் மழையளவு குறையும் போது, பாசனத்துக்கும் தண்ணீரின் அளவும் குறையும்.
÷காண்டூர் கால்வாயில் சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை உடைப்பு ஏற்பட்டது. இதை பொதுப்பணித் துறையினர் சரி செய்தனர். காண்டூர் கால்வாயை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ரூ. 127 கோடி நிதியை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது.
÷காண்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வரும் ஜன. மாதத்தில் மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பி.ஏ.பி. திட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை மழை அதிகஅளவில் இருக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் காண்டூர் கால்வாயில் பணிகளைச் செய்ய முடியாது.
÷இதனால் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இரண்டு மண்டலங்களுக்குத் தண்ணீர் வழங்கலாம் என்ற கருத்து விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
÷பொதுவாக ஒரு மண்டலத்துக்கு சுமார் 90 நாள்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவதால், ஒரு மண்டலப் பாசனக் காலமான ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் இரண்டு மண்டலங்களுக்கும் தலா 51 நாள்கள் வீதம் தண்ணீர் வழங்கவும், அடுத்த ஆண்டிலும் இதே போல அடுத்த 2 மண்டலங்களுக்கும் தண்ணீர் வழங்கவும், விவசாயிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
÷இது தொடர்பாக திருமூர்த்தி அணைத் திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் கூறியது:
÷காண்டூர் கால்வாயைச் சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் கொடுக்கலாம். வெயில் காலத்தில் பணிகளைத் துவக்கலாம். 2 ஆண்டுகளுக்கு மட்டும் இந்தச் சிரமம் இருக்கும்.
÷அதன்பின் வழக்கம்போல ஒரு மண்டலத்துக்குத் 90 நாள்கள் வீதம் தண்ணீர் கிடைக்கும். கால்வாய் சீரமைக்கப்பட்டால் தண்ணீர் சேதமும் மிகக் குறையும். இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு மனு கொடுத்துள்ளோம், என்றார்.