தினமணி 04.10.2010
கடைநிலை ஊழியரின் பணி ஓய்வு வயதை 60 ஆக்குவதை பரிசீலிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு
மதுரை, ஜூலை 3: மதுரை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு கடைநிலை ஊழியருக்கு பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் இயக்குநர் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சோலைமலை தாக்கல் செய்த மனு:
நான் மதுரை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் தாற்காலிகப் பணியாளராகச் சேர்ந்து 1992-ல் கடைநிலை ஊழியராகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 2009-ல் எனக்கு 58 வயது முடிவதால் பணியிலிருந்து ஓய்வு பெறுமாறு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். துப்புரவுப் பிரிவு நகரமைப்புப் பிரிவில் பணிபுரிவோர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதன்படி எனது ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், துப்புரவு மற்றும் நகரமைப்புப் பிரிவில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 என உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரர் தனது ஓய்வு பெறும் வயதை நீட்டிக்குமாறு மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவை மாநகராட்சி ஆணையர், குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் ஆகியோர் பரிசீலித்து தகுந்த ஆணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.