மாலை மலர் 07.10.2010
சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற 60 மோட்டார் பம்புகள்; கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
சென்னை, அக். 7- வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் சுமார் 600 கிலோ மீட்டர் நீள மழைநீர் வடிகால் தூர் வாரப்பட்டுள்ளது. இன்னும் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. வட சென்னையில் பி.கால்வாய், தென் சென்னையில் மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இவற்றை நேரில் பார்வையிட்ட மேயர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-
வீராங்கல் ஓடை விருகம் பாக்கம் கால்வாய், கொளத்தூர், மாதவரம் உபரிகால்வாய், பி.கால்வாய், நல்லான் கால்வாய் போன்றவை தூர் வாரப்பட்டு வருகின்றன.12 சுரங்கப்பாதைகளில் மழைநீரை வெளியேற்றவும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை அகற்றவும் 60 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழைநீர் அதிகம் தேங்கினால் அவற்றை துரிதமாக வெளியேற்ற 50 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார்கள் ரூ.40 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது.
அனைத்து மண்டல அலுவலகங்களிலும் எங்கும் எளிதாக எடுத்து செல்லும் வசதியுடன் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிக மழை பெய்து வெள்ளம் வந்தால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல 54 மீட்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.