தினகரன் 17.06.2010
ஆவடி நகராட்சியில் பார்க்கிங் வசதியுடன் எரிவாயு தகன மையம் ரூ.64 லட்சத்தில் அமைப்பு
ஆவடி, ஜூன் 17: சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், நவீன எரிவாயு தகன மையம் அமைக்க ஆவடி நகராட்சி முடிவு செய்தது. இதற்காக, திருமுல்லைவாயல்&சோழம்பேடு சாலையில் உள்ள சுடுகாட்டு பகுதியில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு தகனமையம் அமைக்கும் பணி தொடங்கியது.
இதற்காக, ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ரூ.20 லட்சம் அரசு மானியமாகவும், மீதி தொகை நகராட்சி நிதியிலிருந்தும் ஒதுக்கப்பட்டது. தற்போது, தகனமேடை பணிகள் முடிவடைந்து விட்டன. தகனமேடைக்கு முன்பு பூங்கா, அலுவலக அறை கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.
இதுகுறித்து ஆவடி நகராட்சி தலைவர் விக்டரி மோகன் கூறியதாவது:
ஆவடி நகராட்சியில் எரிவாயு தகனமேடை கட்டும் பணி முடிவடைந்து விட்டது. இங்கு, இறுதி சடங்கு செய்ய எரியூட்டு மேடை, பிரேயர் ஹால், கழிவறை, குளியலறை, பொதுமக்கள் அமர்வதற்கு 3 அறைகள், ஜெனரேட்டர், வாகனங்கள் நிறுத்த போதுமான இடம், பூங்கா, சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
சடலங்களை எரிக்க ஒரு தகன மேடை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து எதிர்காலத்தில் மற்றொரு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி கட்ட பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. பணிகள் முடிந்ததும் விரைவில் தகனமேடை திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.