வட்டச்சாலை, ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.65 கோடி: மேயர் தகவல்
ஈரோடு மாநகராட்சியில் வட்டச்சாலை, ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.65.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மேயர் ப.மல்லிகா பரமசிவம் கூறினார்.
ஈரோடு மாமன்றக் கூட்டம், மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயர் கே.சி.பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் பேசியது:
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ரூ.90 லட்சமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே புதிய மேம்பாலம் அமைக்க ரூ.50 கோடியும், வட்டச்சாலை, சாஸ்திரி நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.65.60 கோடியும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்காகவும், மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதற்காகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். அதைத் தொடர்ந்து மன்றக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
46-வது வார்டு உறுப்பினர் எம். ஈஸ்வரமூர்த்தி (அதிமுக): எனது வார்டில் உள்ள முத்துச்சாமி காலனியில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: குடிநீர்ப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்டலத் தலைவர் இரா.மனோகரன் (அதிமுக): துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மேஸ்திரியாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
ஆணையர் மு.விஜயலட்சுமி: அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு அலுவலக உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்படும்.
35-வது வார்டு உறுப்பினர் தங்கவேல் (அதிமுக): எனது வார்டில் உள்ள பழையபாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலை தோண்டப்பட்டு வேலை முடிக்கப்படாமல் குழி மூடப்பட்டுவிட்டது. இதனால், அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பாதிக்கப்பட்டதோடு, சாலையும் பழுதடைந்துள்ளது.
மேயர்: சரியாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை மாற்றிவிட்டு வேறு நபரிடம் அப்பணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
45-வது வார்டு உறுப்பினர் என்.விநாயகமூர்த்தி (விடுதலைச் சிறுத்தைகள்): எனது வார்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு இதுவரை விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கப்படவில்லை.
துணை மேயர் கே.சி.பழனிசாமி: சிறிய வார்டுகளில்தான் முதலில் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுயில் தேமுதிக உறுப்பினர் வெற்றி பெற்றாலும்கூட, அங்குதான் அதிகமாக விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல்வர் கூடுதலாக விலையில்லா பொருள்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். எனவே, இந்த ஆண்டு நிச்சயம் வழங்கப்படும்.
54-வது வார்டு உறுப்பினர் சபுராமா (காங்கிரஸ்): எனது வார்டில் உள்ள பன்றி வளர்க்கும் பட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை. ஆழ்துளை கிணற்றில் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.