தினமணி 06.04.2013
ராயபுரம் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.75 கோடிசேத்துப்பட்டு ஏரியில் படகு சவாரி-பசுமைப் பூங்கா
தினமணி 06.04.2013
ராயபுரம் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.75 கோடிசேத்துப்பட்டு ஏரியில் படகு சவாரி-பசுமைப் பூங்கா
சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை ஒட்டியுள்ள
சேத்துப்பட்டு ஏரியில், படகு சவாரி, நீர் சாகச விளையாட்டுகள்
அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும், ராயபுரம் மீன்பிடி துறைமுகம் ரூ.75 கோடியில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சென்னை சேத்துப்பட்டில் மீன்வளத் துறைக்குச் சொந்தமாக 15 ஏக்கர்
பரப்பளவுள்ள ஏரி உள்ளது. இந்த ஏரி ரூ.42 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
அங்கு பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமைப் பூங்கா
அமைக்கப்படும்.
இந்த ஏரியில் பொழுதுபோக்கு அம்சங்களான தூண்டில் மீன்பிடிப்பு, நீர் சாகச
விளையாட்டுகள், படகு சவாரி, திறந்த வெளி அரங்குகள் மற்றும் சிறுவர்கள்
விளையாட்டு திடல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த பூங்கா பசுமையுடன் விளங்கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் அழகிய
மற்றும் அரிய வகை மரங்கள் வளர்க்கப்படும். இந்தப் பசுமைப் பூங்காவில்
உருவாக்கப்படவிருக்கும் நடைபாதை மற்றும் தொடர் நடை ஓட்டப் பாதைகள்
மக்களுடைய உடல் மற்றும் மன நலத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு உதவும்.
மேலும், அங்கு பல அடுக்கு வாகன நிறுத்த வசதிகள் அந்தப் பகுதியில் உள்ள
போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிவகை செய்வதோடு, சென்னையில் பல்வேறு
பகுதிகளில் உள்ள மக்களும் இந்தப் பூங்காவை பயன்படுத்த வழி வகுக்கும். இங்கு
மீன் உணவகமும் அமைக்கப்படும்.
ராயபுரம் மீன்பிடி துறைமுகம்: ராயபுரம் மீன்பிடி துறைமுகம் கடந்த
1984ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 575 மீன்பிடி படகுளை நிறுத்தத்
தேவையான வசதிகள் கொண்டதாக இந்தத் துறைமுகம் விளங்குகிறது. சுனாமி ஏற்பட்ட
போது மீன்பிடி இறங்குதளம் மிகவும் பழுதடைந்தது. பழுதடைந்த இந்த மீன்பிடி
இறங்குதளத்தை சீர்செய்ய 2011ஆம் ஆண்டு ரூ.16.24 கோடியை தமிழக அரசு
ஒதுக்கீடு செய்தது.
படகு நிறுத்துமிடம் சீரமைக்கப்படுவதுடன், மீன் ஏலக்கூடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்போது இந்த மீன்பிடி துறைமுகத்தில் படகுகளின் எண்ணிக்கை ஆயிரத்து 395
ஆக உயர்ந்துள்ளதையும், கையாளப்படும் மீன்பிடி அளவு அதிகரித்துள்ளதையும், இட
நெருக்கடி காரணமாக மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதில் மிகுந்த
இடையூறுகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டும் ரூ.75 கோடியில் இந்தத்
துறைமுகம் மேம்படுத்தப்படும்.
இதன்படி, வடக்கு அலை தடுப்புச் சுவரில் 300 மீட்டர் நீளத்தில் புதிய
படகுத் துறை அமைத்தல், கண்ணாடி நாரிழை படகுகள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில்
200 மீட்டர் நீளத்துக்கு புதிய படகு துறை அமைத்தல், இப்போதைய படகு
துறையினை வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் தலா 50 மீட்டர் நீளத்துக்கு
நீட்டிப்பு செய்தல், 150 மீட்டர் நீளத்துக்கு 2 புதிய துணை படகு துறையும்
அமைத்தல், படகினை பழுது பார்க்க வசதியாக சாய்வு தளம் அமைத்தல், 2 புதிய வலை
பழுது பார்க்கும் கூடங்கள் கட்டுதல், சூரிய சக்தி மூலமாக இயங்கும்
விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.