தினமலர் 29.01.2014
தாம்பரம் நகராட்சி மண்டபம் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிப்பு
தாம்பரம் : தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான, அம்பேத்கர் திருமண மண்டபம், 80 லட்சம் ரூபாய் செலவில், ‘பயோகாஸ்’ மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதியுடன், புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு தாம்பரம், 35வது வார்டு, முத்துலிங்கம் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திருமண மண்டபம் உள்ளது. போதிய இடசவதி இருந்தும், திருமண அரங்கு மற்றும் சாப்பிடும் அறை, சிறியதாக இருந்தன. அதனால், 80 லட்சம் ரூபாய் செலவில் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
விதவிதமான விளக்குகள் கொண்ட, மேற்பூச்சுகளுடன் கூடிய திருமண அரங்கு, காய்கறி கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் ‘பயோகாஸ்’ மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதி, ஒரேநேரத்தில் 700 பேர் பேர் அமர்ந்து சாப்பிட வசதியான அரங்கு, வாகன நிறுத்த வசதி, மணமகன், மணமகள் அறைகள் உள்ளிட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய ஐந்து அறைகள், இரண்டு சாதாரண அறைகள் ஆகியவை அந்த மண்டபத்தில் அமைகின்றன.
இதுவரை, 80 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்து, பயன்பாட்டிற்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.