தினமலர் 24.08.2010
ரூ.ஒரு கோடி மதிப்பில் 96 நவீன பஸ் ஸ்டாப் முயற்சி! “ஸ்பான்சர்‘ தேடும் போக்குவரத்து போலீசார்
திருப்பூர் : திருப்பூரில் உள்ள பிரதான ரோடுகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 96 நவீன பஸ் ஸ்டாப் களை ஏற்படுத்த, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்; ஒரு ஸ்டாப்புக்கு ஒரு நிறுவனம் என “ஸ்பான்சர்‘ பிடித்து, அத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு ஆகிய ஏழு பிரதான ரோடுகள் செல்கின்றன. இதுதவிர காலேஜ் ரோடு, கொங்கு மெயின் ரோடு, குமரன் ரோடு, நடராஜ் தியேட்டர் ரோடு உள்ளிட்ட ரோடுகளும், நகர போக்குவரத்தில் முக்கிய ரோடுகளாக உள்ளன.
பிரதான ரோடுகள் மற்றும் முக்கிய ரோடுகளில் பஸ் ஸ்டாப் கள் இருந்தாலும், போதிய நிழற் குடை வசதிகளுடன் அவை இல்லை. தவிர, நிழற்குடைகள் உள்ள பகுதிகளில் பஸ்கள் நிற்காததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் ரோட்டோரங்களில் காத்திருந்து பஸ்களில் ஏறும் அவல நிலை நீண்ட காலமாக தொடர்கிறது. பஸ் சுக்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியருக்கும் பாதுகாப் பில்லாத நிலையே உள்ளது. தவிர, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக் கப்பட்ட பஸ் ஸ்டாப் களாக இருப்பதால், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வாகன போக்குவரத்து அதிகரித்து நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது.
திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, 31 இடங்களில் நெருக்கடியாக உள்ள பஸ் ஸ்டாப்களை சற்று தள்ளி அமைக்க திட்டமிட்டுள்ளனர். மாநகர போக்குவரத்து போலீசார், நவீன பஸ் ஸ்டாப் மற்றும் நிழற்குடை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் 46 இடங்களிலும், தெற்கு பகுதியில் 50 இடங்களிலும் பஸ் ஸ்டாப்களை நவீன முறையில் அமைத்து, நிழற்குடைகளை ஏற்படுத்த உள்ளனர். ஸ்டாப்பில் 15 பேர் வரை அமர்ந்து கொள்ள இருக்கை வசதி; 30 பேர் வரை நின்று கொள்ள இட வசதி; குடிநீர் மற்றும் தொலைபேசி வசதி; நிழற்குடை முகப்பில் பஸ் நிறுத்த இடத்தின் பெயர்; பக்கவாட்டில் ஒரு பகுதியில் அவ்வழியாக செல்லும் பஸ்களின் எண்கள் மற்றும் செல்லும் பகுதிகளின் பெயர்கள் எலக்ட்ரானிக் மின் எழுத்துகளில் “டிஸ்பிளே‘யாகும் வகையில் அமைக்கப்பட உள்ளது; நிழற்குடையின் மற்றொரு பகுதியில் நிழற்குடையை அமைத்து கொடுத்த நிறுவனத்தின் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒவ் வொரு நிழற்குடைக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அணுகி, நிழற்குடைகளை அமைக்க “ஸ்பான்சர்‘ பிடிப்பதில் போக்குவரத்து போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர்; ஒரு நிழற்குடைக்கு ஒரு நிறுவனம் என்ற முறையிலும், பெரிய நிறுவனங்கள் 10 முதல் 15 நிழற்குடைகளை அமைத்து தரவும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
போலீசாருக்கு நிழற்குடை : திருப்பூரில் போக்குவரத்து போலீசார், ரோடுகளுக்கு நடுவில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்; மழை, வெயில் நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், முக்கிய சந்திப்புகளில், நிழற்குடை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்தும், போக்குவரத்து போலீசார் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.